கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு: முகத்தில் மிளகாய் பொடி வீசி கைவரிசை

சேலம்: சேலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி வீசி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அஸ்தம்பட்டி டிவிஎஸ் காலனியை சேர்ந்தவர் பொன்ராணி (69). இவர் நேற்றிரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் இருந்தார். அப்போது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர் ஒருவர், தெருவில் நின்றவர்களுக்கு சாக்லெட் கொடுத்துக் கொண்டு வந்தார். பொன்ராணி அருகே வந்த அவர், ஆட்டம் ஆடியபடி சாக்லெட்டை எடுத்து கொடுத்துள்ளார்.

அதனை அவர் வாங்கியபோது, திடீரென அவரது முகத்தில் மிளகாய் பொடியை வீசி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடினார்.

தன்னிடம் நகை பறித்ததை உணர்ந்த பொன்ராணி, திருடன் என கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த திருடன் வேகமாக தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த திருடன் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: