பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ.290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை அதிரடி

சென்னை: பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ.290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அருணாச்சலா இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், இண்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர், காமாட்சி அண்ட் கோ, ஹைரா டிரேடர்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் கடந்த நவம்பர் 23ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொது விநியோக திட்டத்துக்கு உணவு பொருட்களை சப்ளை செய்யும் 5 நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்கள், நிர்வாகிகள் இடங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் 4 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அருணாச்சலா இம்பெக்ஸ் ரூ.60 கோடி, பெஸ்ட் டால் மில் ரூ.80 கோடி வருவாயை மறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இண்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனம் ரூ.150 கோடி வருவாய் மறைப்பு செய்துள்ளது. இவர்கள் போலியான ரசீதை தயாரித்து பல கோடிக்கு விற்பனை நடந்தது போல் கணக்கு எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மறைத்து வைத்துள்ள சொத்துக்கள் எவ்விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? வெளிநாட்டில் ஏதேனும் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: