சென்னை- பெங்களூரு இடையே பணிகள் நடைபெற்று வரும் விரைவுச்சாலைக்கு கையக்கபடுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை : சென்னை- பெங்களூரு விரைவுச்சாலைக்கு கையக்கபடுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், என்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வுநாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 275  மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறோம். சென்னை- பெங்களூரு விரைவிச் சாலை அமைப்பதற்கான கடந்த 2016ம் ஆண்டு 64 விவசாயிகளுக்கு சொந்தமான 154 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடாக கடந்த 2019ம் ஆண்டு ஒரு செண்டிற்கு 17ஆயிரத்து446 நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், விவசாய நிலத்தை இழந்த எங்களுக்கு ஒரு செண்டிற்கு கூடுதலாக ₹160 வழங்க வேண்டும். எனவே, இந்த மனுவை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆற்காடு நகரம் பஸ் நிலையம், காமராஜர் சிலை கீழ் வசித்து வரும் குருவிக்காரர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; நாங்கள் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்நிலையில், சொந்த வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிபட்டு வருகிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூங்கோடு கிராம காவல் நிலையத்திற்கு பின்புறத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கலவை தாலுகா மேல்நேத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள் இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது பெயரில் சொந்த இடம், வீடு எதுவும் இல்லை. தற்போது குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு அரசு சார்பில் இலவசம் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதேபோல், திமிரி அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கிழக்கு தோப்பு என்கிற பகுதியில் வீடு கட்டி 10 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், வாலாஜா தாலுகா அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மேற்கண்ட முகவரியில் பல ஆண்டுகளாக வசித்து வருகுறோம்.

நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு குடிநீர் வரி, மின்சார வரி, வீட்டு வரி ஆகியவை செலுத்தி வருகிறோம். இந்நிலையில், நாங்கள் வசித்து வரும், இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் குடியிருப்பு நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயம் ஆகியவற்றையும், சர்வதேச பெண்கள் குழந்தைகள் தினம் முன்னிட்டு  நடைபெற்ற கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டு தெரிவித்தார். இதில், டிஆர்ஓ மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் தாரகேஸ்வரி மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: