குளித்தலை நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கு.க அறுவை

குளித்தலை : குளித்தலை நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை தினகரன் செய்தி எதிரொலியால் நகராட்சி பணியாளர்கள் பிடித்து கு.க செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியில் நேற்று காலை வெறி நாய் ஒன்று சாலையில் பைக்கில் வந்தவர்களை துரத்தி கடித்துள்ளது. இதில் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (40), சுரேஷ்(36), காயத்ரி (17), ஜெய்சங்கர் (43), உசேன்கான் (51), யுவவர்மா(14), பிளஸ் டூ படிக்கும் மாணவி, செந்தில்குமார் (48), புருஷோத்தமன் (30) ஆகிய எட்டு பேரையும் காலில் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக குளித்தலை நகரப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலையில் குறுக்கே திடீரென ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் சிறுவர்,சிறுமிகளை பலரையும் தெருநாய்கள் துரத்தி வந்ததால் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் நிதிநிலை காரணமாக தங்களால் ஏதும் செய்ய முடியவில்லைஎன்று கூறி வருகின்றனர். தற்போது 8 பேரை வெறிநாய் கடித்ததால் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேலாவது குளித்தலை நகராட்சி நிர்வாகம் தெரு நாய்கள், வெறிநாய்களை கட்டுப்படுத்துவதில் கவனம்செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 20ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது.

செய்தி எதிரொலியால் குளித்தலை நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தெரு நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு மற்றும் வெறி நாய் தடுப்பூசி அளிக்கும் திட்டத்தின்கீழ் குளித்தலை நகராட்சி மற்றும் திருநெல்வேலி மாஸ் அறக்கட்டளை பணியாளர்கள் குளித்தலை நகரத்தில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை பிடித்தனர்.

Related Stories: