சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி வட்டமலைக்கரை அணையில் 10,008 தீபமேற்றும் விழா-பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்பு

வெள்ளக்கோவில் : சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணையின் கரையில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நேற்றுமுன்தினம் இரவு 10,008 கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில், வட்டமலை கரை ஓடையை தடுத்து அணையானது 0.27 டி.எம்.சி இருப்பு வைக்கும் வகையிலும், 6048 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் இடது வலது கரை கால்வாயுடன் கடந்த 1980ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 1996க்கு பிறகு நீர் வரத்து இல்லாததால் அணை காய்ந்து போனது.

இதனையடுத்து பிஏபி கள்ளிபாளையம் மதகில் இருந்து அணைக்கு தண்ணீர் திறக்க கோரி கடந்த காலங்களில் பலமுறை கோரிக்கையாகவும், பல்வேறு கட்ட கவன ஈர்ப்பு போராட்டமும் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் நடத்தினர்.மேலும்  உப்பாறு அணையும் நிரம்பினால் வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்கலாம் எனும் அரசாணை அடிப்படையில்,கடந்த ஆண்டு நவம்பரில் உப்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முயற்சியால், 2021 நவம்பர் 28ம் தேதி  கள்ளிபாளையம் மதகில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். அப்போது விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் வைத்து, மலர் தூவி தண்ணீரை வணங்கி வரவேற்றனர்.

அணை கடந்த 25 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில், அணையில்,கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை கிட்டதட்ட 80 நாட்கள் 22 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனால் அணையை சுற்றியுள்ள காங்கேயம் பாளையம், செட்டிபாளையம், தாசவநாய்கன்பட்டி, உத்தமபாளையம், நாகமநாய்க்கன்பட்டி,மயில்ரங்கம்  ஆகிய சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், ஊராட்சி ஆழ்துளை  கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

இதனை தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து,கடந்த மார்ச் 9ம் தேதி வட்டமலைக் கரை ஓடை தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இடது மற்றும் வலது புற பிரதான கால்வாய் வழியாக,வினாடிக்கு 40 கன அடி வீதம் இரு வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டது. மொத்தம் மூன்று சுற்றுகளாக 21 நாட்களுக்கு உரிய கால இடைவெளியில் 145 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் வெள்ளகோவில், முலையாம்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 6048 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்றன.கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்த வட்டமலைக்கரை அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டு,இரு முறை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில்,அணைப்பகுதி மற்றும் நீர்வழிப் பாதையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரியும்,அணைக்கு தண்ணீர் கொண்டு வர நிரந்தர தீர்வு கோரியும், அணையை அசுத்தப் படுத்தி வரும் மதுக் கடையை உடனே அகற்றக் கோரியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் இந்த ஆண்டு 10,008  கார்த்திகை தீபம் ஏற்றும் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது.

 இதில் விவசாயிகள், பொதுமக்கள்,தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகள் ஒன்றிணைந்து கார்த்திகை தீபம் ஏற்றினர்.ஏற்கனவே அமராவதி ஆற்றில் வெள்ள காலங்களில் செல்வும் உபரி நீரை கால்வாய் வெட்டி வட்டமலைக் கரை அணைக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்காக அரசுக்கு கருத்துருவும் நீர்வள ஆதாரத் துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தை நிறைவேற்றினால் அணைக்கு ஆண்டில் இருமுறை தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தும்,தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்த அமைச்சர் சாமிநாதனுக்கு நன்றி தெரிவித்தும் அணையின் நீர்போக்கி பகுதியில் தீபம் ஏற்றினர்.

Related Stories: