தஞ்சாவூர் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணி தீவிரம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூர் பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தமாக கரும்பு, உளுந்து. சோளம், நிலக்கடலை சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூரை அடுத்த திருக்கானூர்பட்டி, குருங்குளம், மேட்டுப்பட்டி, புனர்குளம் நாகப் உடையான்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாகப்புடையான்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடி விதைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி கூறியதாவது :நிலக்கடலை விதை ஒரு மூட்டை ரூ.4,500க்கு வாங்கி தற்போது விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். பயிருக்கு முறையான நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக செய்வது அவசியமாகும். நிலக்கடலை மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். பயிர் வகையை சார்ந்து இருந்தாலும் நிலக்கடலை மற்ற வகை பயிர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய் காய்க்கும் அதிசய பயிராக விவசாயிகள் மத்தியில் போற்றப்படுகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் நிலக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், நோய் தாக்குதலில் பயிர் சிக்காமல் இருந்தால் நிலக்கடலை விளைச்சல் நன்றாக இருக்கும். பரவலாக மழை பெய்யும்போது வயலுக்குள் தேங்கும் மழைநீரால் விளைச்சல் பாதிக்கும். பெரும் நஷ்டம் ஏற்படும். இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.

இதுகுறித்து தஞ்சை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது :

கார்த்திகை, மார்கழி மாதங்களில் நிலக்கடலைகளை விதைப்பது அதிக லாபம் தரும். அதற்கு நல்ல விதைகளை விதைப்பது அவசியமாகும். நிலக்கடலையில் ஏற்படும் வேர் மற்றும் தண்ட அழுகல் நோயை தடுக்க விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் நோய் பரவலை தடுக்கலாம். அதற்கான மருந்துகளாக கார்பன்டசிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் அல்லது மான்கோசெப் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

பயிர்களை நோய் தாக்கினால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாதிரிகளை கொடுத்து அதற்கான தீர்வுகளை விவசாயிகள் பெறலாம். இவற்றை முறையாக கடைபிடிக்கும்போது விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் நல்ல லாபம் காணலாம் என தஞ்சை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

Related Stories: