கடலாடி அருகே ‘பட்ஜெட் கிராமம்’ இட்லி, தோசை... இரண்டே ரூபாய்-ரூ.1க்கு வடையும் வாங்கலாம்

சாயல்குடி : இன்றுள்ள கையைக்கடிக்கும் விலைவாசிக்கு மத்தியில் கடலாடி அருகே ஆ.புனவாசல் கிராமக் கடைகளில் ரூ.2க்கு இட்லி, தோசை, ரூ.1க்கு வடை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.பெரும் நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை ஒரு இட்லி ரூ.10 முதலும், ஒரு தோசை ரூ.30க்கு மேலும் விற்பனை செய்து வரும் இந்த காலகட்டத்தில் வெறும் 2 ரூபாய்க்கு இட்லி, தோசையா... என ஆச்சரியப்படும் அளவிற்கு போட்டி போட்டுக்கொண்டு ஒரு கிராமத்தினர் விற்பனை செய்து வருவது ஆச்சர்யம் நிறைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான கடலாடி ஒன்றியம், ஆ.புனவாசல் கிராம மக்கள், பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு ஒரு இட்லி ரூ.2க்கும் ஒரு தோசை ரூ.2க்கும், வடை ரூ.1க்கும் என குறைந்த விலைக்கு விற்று குறைந்தளவு லாபம் ஈட்டி வருகின்றனர்.

வியாபாரி திருச்செல்வம் கூறும்போது, ‘‘கிராமம் என்பதால் உறவினர்கள், நண்பர்கள், நன்கு முகம் தெரிந்தவர்களாக உள்ளனர். இவர்களிடம் லாபம் எதிர்பார்க்கக் கூடாது. விறகு அடுப்பு, தட்டு, மரப்பலகை இருக்கை என குறைந்தளவு வசதிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் உதவி செய்வதால் கூலி மிச்சம். இதுபோன்ற சில காரணங்களால் மிகக்குறைந்த விலைக்கு இட்லி, தோசை, வடை விற்க முடிகிறது. லாப நோக்கத்தோடு விற்பனை செய்தால் விவசாயிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள், முதியோர் பாதிக்கக் கூடும்.

இதனால் புனவாசலிருந்து 5 கிமீ தூரம் உள்ள கடலாடிக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் செலவு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என மனநிறைவோடு விற்கிறோம். தற்போது விவசாய சீசன், ஐயப்பன், பழநி முருகன், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சீசன் என்பதால், நாங்களும் மாலை அணிந்து விரதம் இருந்து சமைத்து, விற்கிறோம். காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் அத்தனையும் விற்று முடிந்து விடும்’’ என்றார்.

ஆ.புனவாசல் கிராமமக்கள் கூறுகையில், ‘‘விவசாயிகள் நிறைந்த இந்த ஊரில் 12 சிறிய கடைகள் உள்ளன. 3 பேர் கடைகள் வைத்தும் மற்றவர்கள் வீட்டில் வைத்தும் இட்லி, தோசை, சுண்டல், வடை விற்கின்றனர். வடை ரூ.1, இட்லி ரூ.2, தோசை ரூ.2க்கு விற்கப்படுகிறது, சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது காரச்சட்னி வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.10க்கும், குடும்பமே ரூ.25க்கும் திருப்தியாக சாப்பிட்டு விடலாம்’’ என்கின்றனர்.

Related Stories: