மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு சதுரகிரி மலையேற தடை-பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு : மழை காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஐப்பசி அமாவாசை, பவுர்ணமி, கார்த்திகை அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு மழை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சதுரகிரி மலையில் மழை பெய்ததால் ஓடைகளில் நீர்வரத்து உள்ளது.வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ளது, மழை தொடர வாய்ப்புள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை நேற்று விதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களை மலையேற அனுமதிக்கவில்லை.

இதனால் தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.நேற்று பிரதோஷத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோயில்

பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: