வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்: 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைவு..!

டெல்லி: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இன்று மாலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மான்சஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக அந்தமான் - நிகோபார் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யும். நாளை தமிழகத்தில் வடகடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் பரவலாகவும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக வரும் 8ம் தேதி புதுச்சேரியில் பலத்த முதல் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புயல் எதிரொலியாக இன்று முதல் 9-ம் தேதி வரை அந்தமான், தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்துள்ளனர். நவீன பைபர் படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 25 பேர் அடங்கிய குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: