ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதில் சசிகலா, டிடிவி தினகரன் மோதல் வெட்டவெளிச்சமானது

சென்னை: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக ஊர்வலம் நடத்தியதோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று டிடிவி உத்தரவிட்டதால், சசிகலா கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒன்றாக அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவரும் தனித்தனியாக வந்தனர். டிடிவி தினகரனுக்கு முன்னால் சசிகலாவுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனக்கு கூட்டம் குறைவாக இருந்ததால், தினகரனுக்குப் பின்னால் அஞ்சலி செலுத்த சென்றால் அவரது ஆதரவாளர்களும் தன்னுடன் இணைந்து கொள்வார்கள் என்று சசிகலா நினைத்தார். இதனால், பின்னால் வருவதாக கூறினார். தினகரன் தனது ஆதரவாளர்கள் மூலம் தனக்கு முன்னால் செல்லும்படி சசிகலாவுக்கு சொல்லியும் அவர் பிடிவாதமாக கடைசியாகத்தான் செல்வேன் என்று கூறிவிட்டார்.

இதனால், திறந்த வாகனத்தில் தினகரன் அஞ்சலி செலுத்த மாநில நிர்வாகிகளுடன் சென்றார். மேலும், தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது. அவரது பின்னால் செல்லக்கூடாது என்று கூறிவிட்டார். இதனால், அமமுகவினர் யாரும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் தினகரன் மீது சசிகலா கடும் கோபம் அடைந்தார். கடுகடு முகத்துடன் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார். தினகரன் ஆதரவாளர்கள் பெரிய அளவில் தன்னுடைய வாகனத்தை நெருங்கி வந்து வரவேற்பு கொடுப்பார்கள் என்று சசிகலா எதிர்பார்த்து இருந்தார்.

ஆனால் அது நடக்கவில்லை. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் பலர் அஞ்சலி செலுத்த ஜெயலலிதா சமாதிக்கு வருகை தந்தும் தனக்கு வரவேற்பு கொடுக்காமல் தன்னை சந்திக்காமல் சென்றதால், சசிகலா மன வருத்தத்தில் உள்ளார். இதனால் விரைவில் குடும்பத்தில் பஞ்சாயத்து வெடிக்கும் என்று சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதுவரை இருவரும் தனித்தனியாகத்தான் நிகழ்ச்சிகள் நடத்தினர். ஒரே நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ளாததால், அவர்களது மோதல் வெளியில் தெரியாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் இருவருக்குமான மோதல் வெளியில் தெரியவந்துள்ளது. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் பலர் அஞ்சலி செலுத்த ஜெயலலிதா சமாதிக்கு வருகை தந்தும் தனக்கு வரவேற்பு கொடுக்காமல் தன்னை சந்திக்காமல் சென்றதால், சசிகலா மன வருத்தத்தில் உள்ளார்.

Related Stories: