பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்கும் சாத்தியக்கூறு அறிக்கைக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செல்லக்குமார் எம்.பி. நன்றி

சென்னை: பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் ஏ.செல்லக்குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. குறிப்பாக ஓசூர், தளி, சூளகிரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலை, தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர். இக்கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பலமுறை நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி உள்ளேன். கடந்த மார்ச் 21ம் தேதி கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோரிடமும் இத்திட்டத்தால் 2 மாநிலங்களும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் அடையலாம் என விளக்கமாக கூறப்பட்டது. இதன் பயனாக கடந்த மே 23ம் தேதி கர்நாடக மாநில அரசு சார்பில், இத்திட்டத்தை பெங்களூரு முதல் ஓசூர் வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தேன்.

இந்நிலையில், பெங்களூரு - ஒசூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பதற்கு சாத்தியக்கூறு அறிக்கைக்கு, ரூ.75 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்திற்கு, வருமானம் தருவதில் கிருஷ்ணகிரி மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது. ஆண்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி ஜி.டி.பி தருகிறது. இந்த திட்டம் இருமாநிலங்களின் நலன் சார்ந்த திட்டம். இந்த திட்டத்தை மொழி வாரியாகவும், மாநில வாரியாகவும் பிரிந்து பார்க்க வேண்டாம். சுதந்திரம் என்பதற்கு விளக்கம் கேட்டால் பாஜவினருக்கு தெரியாது. பாலியல் ரீதியாக பாஜவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோஷ்டி மோதல் சந்தி சிரிக்கிறது‌ என்றார்.

Related Stories: