தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய பரந்தூர் விமான நிலையத்துக்கு சர்வதேச டெண்டர்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வெளியீடு

சென்னை: சென்னை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள விமானநிலைய பணிக்கான சர்வதேச டெண்டர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் புதிய விமானநிலையம் அமையவுள்ளது. இதற்காக, பரந்தூரை சுற்றி உள்ள தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், ஏகனாபுரம், எடையார்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தை தவிர்த்து, மேற்கொண்டு 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய  நிலங்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இதில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, திட்ட வரைபடம், சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக திட்டமிடுதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சர்வதேச டெண்டரை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.

டெண்டர் போடுவதற்கு ஜன. 6ம் தேதி கடைசியாகும்.பசுமை விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும். விமான போக்குவரத்தின் வளர்ச்சி  நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சிகள். 2069-70ம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெறவேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Related Stories: