திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: கிருஷ்ணகிரியில் திருமாவளவன் பேச்சு

கிருஷ்ணகிரி: திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், வீரத்தியாகி திப்புசுல்தான் மாநில பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பங்கேற்று பேசியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தல் சராசரி தேர்தல் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கப் போகிறோமா இல்லையா, இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துடன் இந்த மண்ணில் வாழ வேண்டுமா? இல்லையா என்ற கேள்விகளுக்கு விடை காணக்கூடிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

கலைஞர் இல்லாததால், திமுக சிதறி போய் விடும் என கணக்கு போட்டார்கள். ஆனால், திமுகவை தனது தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்துகிறார். இந்தியாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் இடம்பெற்ற ஒரு அணியை கட்டிய பெருமை, ஸ்டாலினையே சாரும். இதனால் தான், ஆர்எஸ்எஸ்சுக்கு குலை நடுங்குகிறது. மூன்று தேர்தல்களில், மகத்தான வெற்றியை இந்த கூட்டணி பெற்றுள்ளது. அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி உள்ளது. தேமுதிக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அதே சமயம், 2019 முதல், திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. ஒரு செங்கல்லை கூட பாஜ, ஆர்எஸ்எஸ் உருவ முடியாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Related Stories: