சின்னசேலம் அருகே கலவரத்தால் மூடப்பட்ட தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் துவங்கியது: 4 மாதத்துக்கு பின் மாணவர்கள் வருகை

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி திடீரென மாடியில் இருந்து விழுந்து இறந்ததை தொடர்ந்து பள்ளியில் நடந்த வன்முறையில் கட்டிடங்கள், பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பள்ளி மூடப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாணவர்கள் நலன்கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து  நேற்று காலை 8 மணியளவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்கார்த்திக்ராஜா தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பள்ளி திறக்கப்பட்டது. பேருந்தில் மாணவர்கள் ஏற்றி வரப்பட்டு வகுப்புகளுக்கு வந்தனர். முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்புகள் வரை துவங்கியது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சக்தி பள்ளி திறக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Stories: