ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து, சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி சார்பில், ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைகோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்து. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் என்.சுந்தர்ராஜ், இணைப் பொதுச் செயலாளர்கள் ஜெகதீசன், மூர்த்தி, கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகமுருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், பொன்குமார் அளித்த பேட்டி: ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம்  மாணவர், இளைஞர், தொழிலாளர்கள் என பல பேர் பணத்தை இழந்து, நிம்மதி இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நடந்து வருகிறது. இதனால் தான் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை இயற்றியது. அந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதற்கான மசோதாவை சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

Related Stories: