பாவு, நூல் விநியோகம் நிறுத்தம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: பாவு, நூல் விநியோகம் நிறுத்தம் காரணமாக 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மூலம் சரிசெய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: சீரற்ற பஞ்சு விலை, நிலையற்ற நூல் விலை, புதிய மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் துணி விலை அடக்கம் உயர்வு காரணமாக ஏற்றுமதியாளர், வர்த்தகர்கள் யாரும் அதிக விலை கொடுத்து உற்பத்தி செய்யப்படும் துணிகளை வாங்க முன்வருவதில்லை.

எனவே, துணி வர்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது. இதையடுத்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் விநியோகம் செய்வதை இரண்டு வார காலத்துக்கு நிறுத்தி வைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் விசைத்தறி தொழிலை சார்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள் 2 வாரம் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் விநியோகிக்கும் பாவு, நூல் மூலமாகவே திருப்பூர், பல்லடம் மற்றும் கோவை மாவட்டத்தில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தற்போது பாவு, நூல் விநியோகம் நிறுத்தத்தால் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பிரச்னைக்கு காரணமான பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: