தனியார் பால் பண்ணைக்கு கறவை மாடுகள் வாங்கியதில் ரூ.5 கோடி மோசடி செய்தவர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பால் பண்ணைக்கு 220 கறவை மாடுகள் வாங்கியதாக கணக்கு காட்டி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பங்குதாரர்களின் முன்ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பால்பண்ணை கடந்த 2018 முதல் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் இயக்குனர்கள் கார்த்திகேயன், மகாலட்சுமி, சுந்தரராஜன், மகேஷ்குமார், முத்து பாண்டியன் ஆகிய ஐந்து பேரும், பால் பண்ணைக்கு மாடுகள் வாங்கியதில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவில், முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.

புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் 5 பேரும் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன்கோரி 5 பேரும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரர்கள் ரவி, ராமகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட 25 பேர் கூட்டாக 2018 முதல் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.  

வெவ்வேறு பகுதியில் முதலீட்டாளர்கள் வசிப்பதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த கார்த்திகேயன், மகாலட்சுமி, சுந்தரராஜன், மகேஷ்குமார், முத்து பாண்டியன் ஆகியோருக்கு மற்ற முதலீட்டாளர்கள் தொழில் அதிகாரம் வழங்கி உள்ளனர்.

இயக்குனர்கள் ஐந்து பேரும், பால் பண்ணைக்கு 220 கறவை மாடுகள் வாங்குவதாகக் கூறி, முதலீட்டாளர்களிடம் இருந்து 5 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். அவர்கள் 220 கறவை மாடுகளுக்கு பதிலாக தரம் குறைந்த 74 மாடுகளை வாங்கியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில் முன்ஜாமீன் தந்தால் அவர்கள் சாட்சிகளை கலைத்துவிட நேரிடும் என்று வாதிட்டார்.அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இயக்குனர்கள் 5 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: