கல்லூரிகளில் கல்வியை பற்றி பேசாமல் ஆளுநர் ரவி அரசியல் பேசுகிறார்: அமைச்சர் பொன்முடி விமர்சனம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்லூரிகளில் கல்வி குறித்து பேசாமல், அரசியல் பேசுகிறார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மைய அரங்கத்தில், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறித்த ஆய்வு கூட்டம்,  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன், அனைத்து அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியாளர்கள், கல்லூரி துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு  என்று ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்க  ஒரு குழுவை உருவாக்கி உள்ளார். அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இந்த கூட்டத்துக்கு வந்துள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள் சிறப்பாக உழைத்து முதல்வர் கூறியதை போல உயர் கல்வித்துறை சிறந்து விளங்க உழைக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 17.88 சதவீதம் உயர்ந்துள்ளது. கல்லூரி நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கல்வி குறித்து பேசாமல் அரசியல் பேசி வருகிறார். அவர் என்ன கருத்து பேசுகிறார் என்று இளைஞர்களுக்கு தெரியும். அதேபோல் சென்னை ஐ.ஐ.டியில் பேராசிரியர்கள் நியமனம் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது இதை முறையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: