திருவண்ணாமலை தீப திருவிழா 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள், 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகாதீப திருவிழா, கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல், எளிய முறையில் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு தீபத் திருவிழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் தீபத்தை காண பல மாவட்டங்களில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் படையெடுத்து வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையம், தாம்பரம், புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை 8ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக விழுப்புரம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பேருந்துகளும், திண்டிவனம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பேருந்துகளும், புதுச்சேரி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பேருந்துகளும், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பேருந்துகளும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலை சென்று மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக வரும் 7ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: