திடீர் மின் தடை காரணமா? சட்டீஸ்கர் மருத்துவமனையில் 4 பச்சிளம் குழந்தைகள் பலி

அம்பிகாபூர்: சட்டீஸ்கரில் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இதில் புதிதாக பிறந்த குழந்தைகள் சிறப்பு பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை  5.30 மணியில் இருந்து 8.30 மணி வரை தொடர்ந்து 4 குழந்தைகள் இறந்தன. குழந்தைகளின் பெற்றோர்கள் மின்சாரம் தடைபட்டதே குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் தான் இந்த துயரம் நிகழ்ந்தது என குற்றம் சாட்டினர்.

ஆனால் மாவட்ட கலெக்டர் கூறுகையில்,‘‘ 4 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர. 2 குழந்தைகள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றனர். ஆரம்ப கட்ட விசாரணையின்படி  சம்பவத்தன்று இரவு 1 மணியில் இருந்து 1.30 மணி வரை மின்சார  ஏற்ற இறக்கத்தால்  மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆனால் குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவில் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் குழந்தைகள் இறந்ததற்கான உண்மை காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. குழந்தைகளின் மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ கூறுகையில்,‘‘ இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், இது குறித்து விசாரிக்க குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளேன்’’ என்றார். இதற்கு  இரங்கல் தெரிவித்துள்ள ஆளுனர் அனுசுயா உய்க்கே,இதில் தக்க நடவடிக்கை எடுத்து பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய நிவாரணம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: