பொருளாதார குற்றவாளிகளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, பொருளாதார குற்றவாளிகளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பத்தை வருவாய் புலனாய்வு துறை பயன்படுத்த வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) 65வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாடு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளை முன்னெடுப்பதில் இந்தியா முன்னணி நாடாக திகழ்ந்து வருகிறது. பிரச்னை உலகளாவியதாக இருக்கும் போது, அதற்கான தீர்வும் உலகளாவியதாக இருக்க வேண்டும். எனவே, நிதி அமைப்புகள், டிஜிட்டல் அமைப்புகளின் சமீபத்திய மாற்றங்களுக்கு ஏற்ப வேகமான நவீன தொழில்நுட்ப வசதிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்துவது அவசியம்.

அடுத்த 25 ஆண்டுகளில் வலுவான, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தங்களை அர்ப்பணித்து பங்களிக்க வேண்டும். நிதி மோசடியை எதிர்த்துப் போராடவும், நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கவும் உதவிய வருவாய் புலனாய்வு அதிகாரிகளை பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். கடந்த நிதியாண்டில், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்த 2,988 கிலோ ஹெராயின் உட்பட, 3,463 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 833 கிலோ தங்கம் மற்றும் 321 கிலோ கொகைன் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

* முக்கிய புள்ளிகளை கண்டுபிடியுங்கள்

டெல்லியில் விஞ்ஞான் பவனில் டிஆர்ஐ நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘போதைப் பொருள் கடத்தல்களைப் பொறுத்த வரையில் சின்ன மீன்களை பிடித்தால் மட்டும் போதாது. இதன் பின்னணியில் உள்ள பெரிய மீன்களான முக்கிய குற்றவாளிகளை நெருங்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். இதைத் தான் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்’’ என டிஆர்ஐ அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Related Stories: