கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெட்டி கடைகளில் குட்கா விற்பனை: தடுக்க வலியுறுத்தல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெறும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இவற்றை இறக்கி, கடைகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஏராளாமான மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை குறிவைத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் குட்கா முதலான போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, மார்க்கெட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெட்டி கடைகளில் ஹன்ஸ் பாக்கெட் ₹80க்கும், பாக்கு ₹40க்கும், மாவா ₹50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது, இங்குள்ள கடைகளுக்கு ஆய்வு செய்ய வருகின்றனர். ஆனால், இந்த தகவல் முன்னதாகவே இங்குள்ள பெட்டி கடைக்காரர்களுக்கு தெரிந்துவிடுவதால், உடனடியாக அவற்றை மறைத்து விடுகின்றனர். பின்னர், எப்போதும் போல் குட்கா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, அரியானா, குஜராத் ஆகிய  வெளிமாநிலங்களை சேர்ந்த டிரைவர்கள், கூலி தொழிலாளிகள் அதிக அளவில் வருவதால், அவர்களுக்கு வேண்டிய குட்கா சில்லறையாகவும், மொத்தமாகவும் இங்கு கிடைக்கிறது.

இதுதவிர டன் கணக்கில் பெரிய கடைகளில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். எனவே, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே வழிப்பறி கொள்ளை, செல்போன் பறிப்பு, பைக் திருட்டு, கள்ள சந்தையில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது குட்கா விற்பனையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில் போட்டியால் கொலைகள் நடக்க வாய்ப்பு உள்ளது. காய்கறிகள், பழங்கள் எடுத்து வருவது போல் குட்காவையும் லாரிகளில் எடுத்துவந்து விற்பனை செய்கின்றனர். எனவே, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

Related Stories: