10% இடஒதுக்கீட்டால் 133 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்: உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவித கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவதால் 133 கோடி இந்திய மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அதுகுறித்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தின் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என கடந்த மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த சட்டத்தினால் 133 கோடி இந்திய குடிமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்டோரை இந்த இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து விலக்கியது இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரானதாகும்.  

கோவிலுக்குள் ஜாதியை காட்டி நுழைய அனுமதிக்கப்படாமல் இருக்கும் பொழுதும், கௌரவம் என்ற பெயரில் ஆணவக் கொலைகள் அரங்கேற்றும் பொழுதும் இடஒதுக்கீடு என்பது தவறானதாக குற்றம் சாட்ட முடியாது. ஜாதியை ஒழிக்க ஜாதியை எதிர்த்து போராட வேண்டுமே தவிர, அதற்கு இடஒதுக்கீட்டை பலிகடா ஆக்கக்கூடாது. மேலும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி சட்டமாக கொண்டு வரும் போது, அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும். நினைப்பதையெல்லாம் நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்தால் இதுபோன்ற சூழல் தான் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: