ரூ1000, ரூ.10,000 என அபராத தொகை அதிகரித்தும் அலட்சியம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள்: விபத்து, கடத்தல் வழக்குகளில் அடையாளம் காண்பதில் சிக்கல்

பல்லாவரம், டிச.6: சென்னை புறநகர் பகுதிகளில் தலைக்கவசம் அணியாமலும், சாலை விதிகளை பின்பற்றாமலும், ஒரு சில வாகன ஓட்டிகள் செயல்படுகின்றனர். இதனை வட்டார போக்குவரத்து அதிகாரிகளில் சிலர் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் சிறுவர்கள் உரிய ஓட்டுநர் உரிமம் இன்றி சாலைகளில் தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை இயக்கி வருகின்றனர். இதனால், இப்பகுதிகளில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம், அரசு விதித்துள்ள சாலை விதிகளை முறையாக பின்பற்றாததே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுவாக, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை இயக்க அரசு அனுமதியளித்து, ஓட்டுநர் உரிமம் வழங்கி வருகிறது. அவ்வாறு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

வாகனங்களை நன்றாக இயக்க தெரிந்தால் மட்டுமே, அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேரில் சோதனை செய்து பார்த்த பிறகே, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் உரிமம் பெறும் வழக்கத்தை அரசு கொண்டு வந்ததற்கு காரணமே, விபத்தின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து, மனித குலத்தை காப்பதற்காக மட்டுமே. ஆனால், சமீபகாலமாக சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு சில வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றாமல், தலைக்கவசமும் அணியாமல் தாறுமாறாக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். வாகன நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கூட, இளைஞர்கள் பைக் ரேஸ்களில் ஈடுபடுகின்றனர். இதில், 18 வயது கூட நிறைவடையாத பள்ளிச் சிறுவர்கள், முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாமல், சட்ட விரோதமாக வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்குகின்றனர். கடந்த மாதம் கூட இதேபோன்று, குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில் 17 வயதே ஆன 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை அசுர வேகத்தில் இயக்கி, அந்த வழியாக வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில், சம்பவ இடத்திலேயே சஞ்சய் (17) என்ற ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்பட்டால், அதற்கு முழு பொறுப்பும், அந்த வாகனத்தை இயக்கிய சிறுவனின் தந்தையையே சேரும். எனவே, அவருக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் அரசே சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்தது. ஆனாலும் கூட, அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஒரு சில பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை, தொடர்ந்து வாகனங்களை இயக்க அனுமதித்து வருகின்றனர். இதனால், அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சாலையில் எந்த தவறும் செய்யாமல் அமைதியாக செல்லும் பிற வாகன ஓட்டிகளும், இவர்களின் செயல்களால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கின்றனர். சமீபத்தில் தமிழக அரசு கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

அவ்வாறு அணியாமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதை எதையும் காதில் வாங்காமல் தற்போதும் கூட, ஏராளமான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், சாலை விதிகளை பின்பற்றாமலும் ஹாயாக உலா வருகின்றனர். இதுபோன்ற வாகன ஓட்டிகள் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமாக சுற்றித் திரிவதை காண முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கார்களில் வலம் வருவோர், தங்களது இஷ்டத்திற்கு நம்பர் பிளேட்களில் பெயர்களை எழுதி வலம் வருகின்றனர். குறிப்பாக, அரசு வாகனங்களில் மட்டுமே காணப்படும் \”G\” அல்லது \”அ\” என்ற எழுத்துக்கள், அவை அரசுக்கு சொந்தமான வாகனங்கள் என்பதை குறிக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒரு சில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்தும், டோல்கேட்டுகளில் பணம் செலுத்தாமல் இலவசமாக செல்லவும், இவ்வாறு எழுதி வைத்துக் கொண்டு ஹாயாக வலம் வருகின்றனர்.

இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளில் சிலர், நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். மாறாக ஆட்டோ ஓட்டுநரிடமும், லாரி ஓட்டுநர்களிடமும் தங்களது வீரத்தை காட்டி வருகின்றனர். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை கருத்தில் கொண்டு, சாலை விதிகளை மீறுவோர் மீது வயது மற்றும் தகுதி ஆகியவற்றை பாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும். தங்களது கடமைகள் என்ன என்பதை உணர்ந்து, அதனை முறையாக செய்ய அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முன் வருவார்களா என்பதே அனைத்து தரப்பு மக்களின் கேள்வியாக உள்ளது.

Related Stories: