குப்பை கிடங்காக மாறிய கொரட்டூர் மயானம்: சீரமைக்க கோரிக்கை

அம்பத்தூர்: சென்னை கொரட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பழமையானது கண்ணகி நகர்  சுடுகாடு. அம்பத்தூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி பல ஆண்டுகளாகியும் இந்த சுடுகாடு புதுப்பிக்கப்படவில்லை. அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள மயானங்கள் எரிவாயு முறைக்கு தரம் உயர்த்தப்பட்டும், இந்த மயானம் மட்டும் இன்னும் சீரமைக்கப்படாமல், மோசமான நிலையில் உள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை வாகனங்கள் மூலம் குப்பையை பிரிக்கும் இடத்திற்கு ெகாண்டு செல்லாமல், இந்த மயானத்தில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், சடலங்களை புதைக்க கூட இடமில்லாத நிலை உள்ளது. மேலும், குப்பை சேகரிக்கும் வாகனங்களையும் இங்கு வந்து நிறுத்தி வைத்துள்ளதால், இறுதி சடங்குகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும், இந்த குப்பை குவியலால் கால்நடைகள் மற்றும் விஷ  ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் தகனம் செய்யவருபவர்களை விஷ ஜந்துக்கள் அச்சுறுத்துவதால் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மயானங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மயானம் மட்டும் பல ஆண்டாக மோசமான நிலையில் உள்ளது. இதனை குப்பை கொட்டும் இடமாக அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சுமார் 35க்கும் மேற்பட்ட புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல், இந்த மயானத்தில் குவித்து வைத்துள்ளனர். பல இடங்களில் தொட்டிகள் இல்லாமல் குப்பை சாலையில் கொட்டப்படும் நிலையில், அதிகாரிகளின் இந்த செயல் அதிர்ச்சியளிக்கிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: