புதுசு புதுசா யோசிக்கிறாங்க... படு குஷியா அள்ளிட்டுப்போறாங்க...ஏசி கண்டன்சர்கள் திருடும் கும்பல் : 3 பேர் பிடிபட்டனர்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் தொடரும் புதுவகை திருட்டுகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தற்போதைய விஞ்ஞான உலகில் தினமும் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால், கண்டுபிடிப்பாளர்களும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போட்டி போட்டுக்கொண்டு, பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தினமும் ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்படி அறிமுகமாகும் பொருட்கள் அனைத்தும், மற்றவற்றில் இருந்து கூடுதல் சிறப்பம்சங்களை பெற்று, தனித்தன்மையுடன் இருந்தால் மட்டுமே, அவை மக்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்று திகழ்கிறது. அந்தவகை பொருட்களே சந்தையில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கிறது. ஆக, புதுமை என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ, தற்போது, கொள்ளையர்கள் தங்களது தொழிலில் இந்த புதுமையை நன்றாகவே கடைபிடிக்க தொடங்கி விட்டனர்.

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி நகைகளை மட்டுமே திருடி வந்த திருடர்கள், தற்போது கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருபடி மேலே சென்று, பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தும் ஏசி இயந்திரத்திற்காக வீட்டின் வெளியே வைத்திருக்கும் கண்டன்சர் எனப்படும் இயந்திரத்தை, சரக்கு லாரியை எடுத்து வந்து, ஏதோ வாடகை வீட்டை காலி பண்ணுவது போல் வந்து, அள்ளிச் செல்லும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும், இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் நகரத்தின் பிரதான சாலைகளிலேயே சர்வ சாதாரணமாக நடக்கின்றன என்பதுதான், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இதற்கு உதாரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன் பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல இனிப்பகத்தில் நடந்த சம்பவத்தை கூறலாம். பல்லாவரம் பிரதான சாலையில் பிரபலமான இனிப்பகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ராபின்.

ஒருநாள் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும், ராபின் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கடையின்வெளியே வைத்திருந்த விலையுயர்ந்த 4 ஏசி கண்டன்சர்கள் திருடுபோய் இருந்தது தெரிய வந்தது.  அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, இரவு நேரத்தில் குட்டியானை என்று அழைக்கப்படும் சிறிய சரக்கு வாகனத்தில் வந்த 3 பேர், சுற்று முற்றும் நோட்டமிட்டவாறு ராபினின் கடைக்கு வருகிறார்கள். என்ன திருடலாம் என்று பார்த்த கும்பலுக்கு, கடையின் வெளிப்பக்கம் வைத்திருந்த ஏசி கண்டன்சர்கள் கண்களில் படுகிறது. படுகுஷியான அவர்கள், ஏதோ வீடு வாடகைக்கு இருந்தவர் காலி செய்வது போன்று, திருடுகிறோம் என்ற அச்சம் கொஞ்சமும் இல்லாமல், சாவகாசமாக ஒவ்வொரு கண்டன்சராக தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி விட்டு, சில லட்சங்கள் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் அங்கிருந்து தப்பிச் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது. பொதுவாக, திருடர்கள் ஒரு இடத்திற்கு சென்று பொருட்களை திருடும்போது, ஒருவித அச்சத்திலும், பதற்றத்துடனும்தான் செயல்படுவர்.

ஆனால், இந்த திருட்டு சம்பவத்தை காணும்போது, எந்தவித ஒரு அச்சமும், குற்ற உணர்ச்சியும் ஆசாமிகளுக்கு இருந்ததாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் பொதுமக்கள் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகலில் கூட பல்லாவரம் பகுதியில் தங்களது வீடுகளில் பயன்படுத்தும் ஏசி இயந்திரத்தின் கண்டன்சர்களை வெளியில் வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, ஏசி கண்டன்சர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே, புதிய வகை திருட்டில் ஈடுபடும் கும்பல்களை போலீசார் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற அத்தியாவசிய பொருட்கள் திருடுபோவது தடுக்கப்படும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: