டெய்லரை தாக்கி பணம் பறித்த சிறுவர்கள் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில் டெய்லரை கட்டையால் அடித்து பணம் பறித்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் பாபு (50). இவர், புளியந்தோப்பு ஜாபர்கான் தெருவில் டெய்லர் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து புளியந்தோப்பு நாச்சாரம்மாள் தெரு வழியாக செல்லும்போது இவரை வழிமறித்த 3 நபர்கள் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஷேக் பாபு பணம் இல்லை என்று கூறியவுடன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக அடித்தனர். கட்டையில் இருந்த ஆணி பலமாக ஷேக் பாபுவின் தலையில் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலை மற்றும் மார்பில் தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சென்னை கன்னிகாபுரம் வாசகி நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (20) மற்றும் புளியந்தோப்பு ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

Related Stories: