தாம்பரத்தில் பேருந்து பயணியிடம் செல்போன் பறித்த இளைஞரை விரட்டி பிடித்த பெண் காவலர்

தாம்பரம்: தாம்பரத்தில் பேருந்து பயணியிடம் செல்போன் பறித்த வடமாநில இளைஞரை விரட்டி பிடித்த பெண் காவலரை, காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் சால்வை அணிவித்து பாராட்டினார். தாம்பரம் காவல் நிலைய குற்ற பிரிவில் பணிபுரிபவர் காளீஸ்வரி. இவர், நேற்று முன்தினம் மாலை தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்து கூடுவாஞ்சேரி மார்க்கமாக செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வடமாநில இளைஞர், சிறிது நேரத்தில் அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த பெண் காவலர் சம்பந்தப்பட்டு அந்த நபரை நோக்கி சென்றுள்ளார். பெண் காவலரை கண்ட வடமாநில இளைஞர் திடீரென அங்கிருந்து ஓட துவங்கியுள்ளார். இதனால், பெண் காவலரும் அவரை துரத்தி சென்றுள்ளார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்ற பெண் காவலர், வடமாநில இளைஞரை மடக்கி பிடித்து, அவரிடம் விசாரணை செய்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை சோதனை செய்தபோது அவரது பாக்கெட்டில் சுமார் ₹76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் இருந்துள்ளது.

இதனையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை நடத்தியதில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (18) என்பதும், பேருந்து பயணி ஒருவரிடம் இருந்து செல்போன் திருடியதையும் ஒப்புக்கொண்டார். சிறிது நேரத்தில் செல்போனை பறிகொடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30), காவல் நிலையம் வந்து புகார் அளித்தார். விவரங்களை சரிபார்த்து, அவரிடம் செல்போனை ஒப்படைத்தனர். பின்னர், சோட்டோவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் குற்றவாளியை விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரிக்கு தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: