2027ல் ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: நடத்தும் வாய்ப்பை நழுவ விட்டது இந்தியா

புதுடெல்லி: ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு சீனாவில்  நடைபெறுவதாக இருந்தது.  ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக போட்டியை நடத்தவில்லை என்று சீனா ஜகா வாங்கியது. அதனால் இப்போது உலக கோப்பையை நடத்தி வரும் கத்தார் அணி அந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டது. இதற்கிடையில் 2027ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெறுவதற்கான ஏலத்தில் பல்வேறு நாடுகள் ஆர்வமுடன் பங்கேற்றன. கடைசி சுற்றில் இந்தியா, சவுதி அரேபியா அணிகள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் ஆசிய கோப்பையை நடத்தும் போட்டியில் இருந்து விலகுவதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) அறிவித்துள்ளது.

இது குறித்து  ஏஐஎப்எப் தலைவர் கல்யாண் சவுபே, ‘எங்கள் திட்டம் மிகவும் எளிமையானது. முக்கியமான சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு முன் நாட்டில் விளையாட்டை மேம்படுத்துவது அசியம். அதுவும் அடிமட்டத்தில் இருந்து  அந்த பணிகளை தொடங்க, கட்டமைப்புகளை மேம்படுத்த  ஏஐஎப்எப் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப போட்டியை நடத்தும் வாய்ப்பில் இருந்து விலகி உள்ளோம். சர்வதேச போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. சமீபத்தில் ஃபிபா யு17  மகளிர் உலக கோப்பை போட்டியை சிறப்பாக நடத்தி உள்ளோம்’ என்று கூறியுள்ளார். இந்தியாவின் இந்த முடிவின் மூலம் 2027ல் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை சவுதி அரேபியா பெறுவது உறுதியாகி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரியில்  பஹ்ரைனின் மனாமா நகரில்  நடைபெறும்  ஏஎப்சி கூட்டத்தில்  வெளியாகும். போட்டியை நடத்தும் நாடுகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெறாவிட்டாலும் நேரடியாக போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனடிப்படையில் தான் சமீபத்தில் இந்தியாவில் நடந்த யு17 மகளிர்  உலக கோப்பையில் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் முதல் முறையாக பிஃபா உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை தான் இந்தியா நழுவவிட்டுள்ளது. கத்தாரில் நடைபெறும் 18வது ஆசிய கோப்பையில் இந்தியா 5வது முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

Related Stories: