2 கி.மீ தூரம் பக்தர்கள் வரிசை; சபரிமலையில் தரிசனத்திற்கு 6 மணி நேரம் காத்திருப்பு

திருவனந்தபுரம்: மண்டல  கால பூஜையையொட்டி சபரிமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள்  குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும்  அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களான வெள்ளி  முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்  காணப்படுகிறது. ஆனால் நேற்று திங்கட்கிழமையாக இருந்தும், சபரிமலையில்  பக்தர்கள் அதிக அளவில் குவிந்து இருந்தனர். நேற்று 90 ஆயிரத்திற்கும்  அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து இருந்தனர்.

காலை 10  மணிக்குள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று  அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள் வரிசை 2 கிமீ வரை  காணப்பட்டது. இதனால் நேற்று பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக  வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெகு  தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏராளமான அறைகள் உள்ளன. ஆனால்  கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக பக்தர்கள் சபரிமலையில் தங்க  அனுமதிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு முதல் படிப்படியாக பக்தர்களுக்கு அறைகள்  ஒதுக்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு பக்தர்கள் தருவதற்கு கூடுதல் வசதிகள்  ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சபரிமலையில் ஒரே நேரத்தில் 17,017 பக்தர்கள்  தங்கலாம். இதற்காக 558 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆன்லைன் மூலமும்,  நேரடியாக சென்ற பின்னரும் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.  அறைகள் குறித்த  விவரங்களை 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையத்தின் 04735 202049 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: