×

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்: ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

டெல்லி: இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம் என ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரையாற்றினார். மேலும் இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்: 2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.
காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Tags : India ,Chief Minister ,Mukhya Modi ,G20 ,K. Stalin , Let's proclaim India's pride to the world: Chief Minister M.K.Stal's speech at the G20 summit
× RELATED நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்