×

உடுமலை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

உடுமலை: உடுமலை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீர் உடுமலை கால்வாய் வழியாக 28 கிலோமீட்டர் பயணித்து கோவிந்தாபுரம் பகுதியை அடைகிறது. தற்போது அணையில் இருந்து பிரதான கால்வாயில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயானது பங்களா மேடு பகுதியில் தொடங்கி தளி ஜல்லிப்பட்டி, பள்ளபாளையம், உடுமலை ஜீவா நகர்,எஸ்.வி புரம், சென்னிமலை பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக கோவிந்தாபுரத்தை அடைகிறது.

இதில் எலையமுத்தூர் பிரிவிலிருந்து எஸ்வி புரம் வரையிலான சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு குடியிருப்புகள் நிறைந்த பகுதி வழியாக கால்வாய் ஓடுகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடுமலை கால்வாயில் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், கால்நடைகளின் தாகம் தணிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று ஜீவா நகர் பகுதியில் தம்பதியர் இரு குழந்தைகளுடன் கால்வாயில் துணி துவைக்க வந்தனர். படிக்கட்டுகளில் குழந்தைகளை அமர்த்திய பின்பு கணவன், மனைவி இருவரும் துணிகளை துவைத்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கணவர் குளித்துக் கொண்டிருக்க மனைவி அவரின் முதுகை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது குழந்தைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று விளையாடியபடி கால்வாய்க்குள் இறங்கின. தண்ணீரின் வேகம் காரணமாக இரு குழந்தைகளும் நீரில் அடித்துச் செல்லப்படவே எதிர் கரையில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தவர் அபாய குரல் எழுப்பினார். இதை அடுத்து அக்கம் பக்கத்தில், விளைநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்கள் ஓடி வந்து கால்வாய்க்குள் குதித்து குழந்தைகள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். சற்றே தாமதித்து இருந்தாலும் குழந்தைகள் இருவரும் அதிக அளவு தண்ணீர் குடித்து உயிரிழந்திருக்க கூடிய அபாய சூழல் ஏற்பட்டிருக்கும். விளைநிலங்களில் கூலி தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததால் உடனடியாக துரித கதியில் குழந்தைகளை காப்பாற்றினர்.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. எனவே குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் அவர்களை குளிக்க வைப்பதற்கு முன் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் துணி துவைப்பதற்காக செல்லும் பெண்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரப் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Udumalai , 2 children who were swept away in the Udumala canal luckily survived
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்