×

ஷட்டர் பழுதால் சாத்தியாறு அணையிலிருந்து வீணாக வெளியேறும் தண்ணீர்: வேகமாக நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

அலங்காநல்லூர்: ஷட்டர் பழுது காரணமாக சாத்தியாறு அணையிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய தேவைக்காகவும் உள்ள ஒரே அணை சாத்தியாறு அணை. இந்த அணை 1966ல் கட்டப்பட்டது. 29 அடி கொள்ளளவுடன் நீர் தேக்க பரப்பளவு உருவாக்கப்பட்டது. தற்போது அணையின் பரப்பளவு சுருங்கி 10 அடிக்கு மணல், வண்டல் மண் நிரம்பி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் அணை பராமரிப்பு மற்றும் ஷட்டர் பழுது நீக்க ரூ.44 லட்சம் பொதுப்பணித்துறை மூலம் ஒதுக்கப்பட்டது. முறையாக பழுது நீக்கி பராமரிக்காத காரணத்தினால் இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஷட்டரை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவது வழக்கமாக உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளது. ஷட்டர் பழுது காரணமாக அதிக தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், விவசாய பணிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். அணையில் இருந்து வெளியேறும் வீணாக வைகை ஆற்றில் கலந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. ஷட்டர் பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தியாறு அணை பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sathiyaru dam , Water leaking out of Sathiyaru dam due to faulty shutters: Farmers worried as water level drops rapidly
× RELATED சாத்தியாறு அணையிலிருந்து...