புளியங்குடியில் 60 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த புள்ளிமான் மீட்பு

புளியங்குடி: புளியங்குடியில் 60 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த புள்ளிமானை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்.புதுக்குடி பெரிய தொண்டைமான் பரவு வயல் பகுதியில் மூக்காண்டி மகன் முத்தையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. தற்போது கிணற்றில் 40 அடியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் நேற்று (ஞாயிறு) புள்ளிமான் ஒன்று கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடியது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையில் சிவகுமார், அய்யனார், ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடம் சென்று கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் புள்ளிமான், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: