கார்த்திகை தீப விழா நாளை கொண்டாட்டம்; குமரியில் அகல் விளக்குகள் திரளி இலை வாங்க மக்கள் ஆர்வம்: கோயில்களில் சொக்கப்பனை ஏற்பாடுகள் தீவிரம்

நாகர்கோவில்: கார்த்திகை தீப விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் அகல் விளக்குகள், திரளி இலை விற்பனை சூடுபிடித்தது. நாளை கார்த்திகை தீப விழாவையொட்டி, கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்கள், வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா நாளை (6ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்டத்திலும் திருக்கார்த்திகை தீப விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். கோயில்கள், வீடுகளில் விளக்கேற்றுவார்கள். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடக்கின்றன. பின்னர் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவே அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று இரவு பகவதி அம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் நாளை அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள், தீபாராதனை ஆகியன நடக்கிறது. இரவு 7 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படும். நாகர்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி கிருஷ்ணசுவாமி கோயில், பறக்கை மதுசூதனபெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடுவர். இதற்காக மண் விளக்குகள் பல வடிவங்களிலும் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. இவற்றின் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவிலில் வடசேரி, ஒழுகினசேரி அப்டா  மார்க்கெட் பகுதியில் சாலை ஓரங்களில் கார்த்திகை விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. சிறியது, பெரியது என தரத்துக்கேற்ப விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று காலை முதல் மக்கள் ஆர்வமாக அவற்றை வாங்கி சென்றனர். இதே போல் குமரி மாவட்டத்தில் கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் கார்த்திகை கொழுக்கட்டை விஷேசமானதாகும். இந்த கொழுக்கட்டை திரளி இலையில் செய்வார்கள்.

கொழுக்கட்டையின் சுவையையும், மணத்தையும் இது மேலும் அதிகரிக்கும். கூடவே மருத்துவ குணங்களையும் கொண்டது. குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இது மிகவும் பரிச்சயமான இலை. இலவங்கப்பட்டை எடுக்கும் மர இனங்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் இதை வயண இலை என சொல்வார்கள். திரளி இலையும் விற்பனைக்காக வந்துள்ளன. வடசேரி மார்க்கெட் பகுதிகளில் பெண்கள் ஆர்வத்துடன் திரளி இலையை வாங்கி சென்றனர்.

Related Stories: