×

திற்பரப்பு அருவியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

குலசேகரம்: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியை அடுத்த முக்கிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவியாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. இதனால் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மதியத்திற்கு மேல் மலை மற்றும் மழையோர பகுதிகளில் கனமழை, சாரல் என்று பெய்து வருகிறது.

இதனால் கோதையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவியின் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து தண்ணீர் கொட்டி வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், மலைக்கு சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் திற்பரப்புக்கு படையெடுக்கின்றனர். ஆகவே காலை முதலே கூட்டம் களை கட்டி வருகிறது. திற்பரப்பு சுற்று வட்டார பகுதியில் வெளியில் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. இது சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொண்டு உள்ளது. இதுதவிர சுற்றுலா பயணிகள் அருவியின் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். அதேபோல் அருவியில் மேல்புறத்தில் உள்ள தடுப்பணையிலும் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர்.

Tags : Aiyappa ,Tilparapu , Aiyappa devotees flocking to Tilparapu waterfall
× RELATED திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை