சிங்கப்பூரில் இன்று அறுவை சிகிச்சை; மகளின் சிறுநீரகத்தை தானமாக பெறும் லாலு: நலம்பெற வேண்டி பீகாரில் விஷேச பூஜை

பாட்னா: இன்று சிங்கப்பூரில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதால், பீகார் மாநிலத்தில் உள்ள முக்கிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடைபெறுகின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவிற்கு சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தற்போது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு லாலுவின் மகள் ரோகினி ஆச்சார்யா குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். லாலுவுக்கு ரோகினி ஆச்சார்யா தான் சிறுநீரகத்தை தானமாக வழங்குகிறார். இன்று ரோகினி ஆச்சார்யா தனது சிறுநீரகத்தை தானமாக தனது தந்தை லாலுவுக்கு வழங்குவதால், இருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அதனால் சிங்கப்பூரில் தற்போது பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி, எம்பி மிசா பார்தி உள்ளிட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.

லாலுவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அவர் குணமடைய வேண்டி, நேற்று முதல் பாட்னாவில் உள்ள டானாபூரில் உள்ள மெயின்புரா காளி கோயிலில் விஷேச பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை லாலுவுக்கு நடப்பதால், பீகார் அமைச்சர் அலோக் மேத்தா உள்ளிட்டோர் கோயிலில் ருத்ராபிஷேகம் செய்ய உள்ளனர். இதேபோல் மாநிலத்தின் பல்வேறு கோயில்களில் ஹவன பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: