அண்ணாநகரில் நடு ரோட்டில் கத்தியுடன் மக்களுக்கு மிரட்டல்: வீடியோ வைரல் ; ஒருவர் கைது

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்(38). இவர் அண்ணாநகர் 4வது மெயின் ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு இவரது கடைக்கு குடிபோதையில் வந்த 5 பேர், ஜூஸ் கேட்டுள்ளனர். அதற்கு விக்டர், ‘’ஜூஸ் முடிந்து விட்டது. கடையை பூட்டப்போகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அவர்கள், விக்டரை சரமாரியாக தாக்கியதுடன் தாங்கள் வைத்திருந்த பட்டா கத்தியால் ஜூஸ் கடையிலும் சாலையில் செல்பவர்களையும் வாகன ஓட்டிகளை வெட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

மேலும் இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக ஜூஸ் கடை உரிமையாளர் விக்டர் கொடுத்த புகாரின்படி, அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து கும்பலை தேடி வந்தனர். மேலும் அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில், அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிசந்திரன், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் ஆகியோரின் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றிரவு கும்பலில் ஒருவனை கைது செய்தனர்.

இதனிடையே எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த சாலையில் ரவுடி கும்பல் பட்டாக்கத்தியுடன் மிரட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியுடன் அவர்கள் விரட்டும் காட்சிகளும் சாலையில் செல்லும் கார் கண்ணாடிகளை உடைப்பதும் ஒரு சொகுசு காரை வழிமறித்து மிரட்டும் காட்சிகளும் பொதுமக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளது.

Related Stories: