×

ஜி-20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்றார்

சென்னை: இந்தியா உள்பட 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு கடந்த ஆண்டு இந்தோனேஷியாவிடம் இருந்தது. இதையொட்டி கடந்த மாதம் அந்நாட்டின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டின் முடிவில் ஜி-20 தலைமை  பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்பட்டது. ஜி-20 தலைமையை பிரதமர் மோடியிடம்  முறைப்படி இந்தோனேசியா ஒப்படைத்தது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு  ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பு வகிக்கும். அந்த வகையில் இந்தியாவுக்கு ஜி-20 மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறது. ஜி-20 மாநாடு தொடர்பாக 32 துறைகளின் சார்பில் 200 ஆலோசனைக் கூட்டங்களை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துவதால் இந்தியா முழுவதும் உள்ள தொல்லியல் சின்னங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் உள்ள 5 ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, வேலூர் கோட்டை மதில் உள்ளிட்ட இடங்களில் லேசர் ஒளியுடன் கூடிய வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டங்களை தமிழகத்தில் நடத்தும் இடங்களில் தஞ்சை,  கோவை ஆகியவையும் பரிசீலனையில் உள்ளன. இதற்கான ஆலோசனைகளை தமிழக அரசிடம்  ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில்  ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று சென்னையிலிருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை அமைச்சர்கள், திமுக  நிர்வாகிகள் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர். முதல்வருடன் செயலாளர்  உதயச்சந்திரன், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர்.

மதியம் 1 மணி அளவில் டெல்லி சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 5.30 மணி அளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான தயார் நிலை பற்றி ஆலோசனை செய்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, டெல்லி சென்ற உடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உள்துறை  அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

அப்போது, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 66 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிடப்பில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எடுத்து கூற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜி-20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு,  புதுடெல்லியில் இருந்து இன்றிரவு 8.40 மணியளவில் ஏர்இந்தியா விமானத்தில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு, இரவு 11.30 மணியளவில் சென்னை  திரும்புகிறார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரும் டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்சுக்கு அழைப்பு இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு வந்திருப்பதால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Delhi ,G-20 Summit , Chief Minister M. K. Stalin went to Delhi today to participate in the G-20 Summit
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!