பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது: 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தி.மு.க சீராய்வு மனு தாக்கல்..!

டெல்லி: உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய  உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த  2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலில் உள்ளது. இதனை எதிர்த்து, ‘யூத்பார் ஈகுவாலிட்டி’ என்ற அமைப்பு உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோன்று தமிழகத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் 7-ம் தேதி, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இதனால், 5 நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று பெரும்பான்மையான தீர்ப்பு வழங்கியுள்ளதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்பட்ட கூடுதல் 10 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அரசாணை சட்டம் செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 12 ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இந்த இட ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்தவேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது. இது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: