அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 6ம் ஆண்டுநினைவு நாளான இன்று (திங்கள்) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது, “வழக்கு மேல் வழக்குகள், அத்தனையும் பொய் வழக்குகள், பொய் வழக்குகளை போட்டு, அதிமுகவை முடக்கிவிட முடியுமா?, அழித்துவிட முடியுமா? துரோகிகளின் சதிவலைகளை அறுத்தெறிவோம்; பொய் வழக்குகளை முறித்தெறிவோம் என்று, சபதம் ஏற்கிறோம்” என்று கூறி உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள்  வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.பா.கிருஷ்ணன் மற்றும் பலருடன் ஜெயலலிதா சமாதிக்கு ஊர்வலமாக வந்து மலர்அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்களை தொடர்ந்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனும் தங்களது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். தமிழக மக்களுக்கு தேவையானதை கேட்டு பெறும் அளவுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் என்னிடம் உள்ளது. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம். “ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்! ஒட்டுமொத்த நம் தொண்டர்களின் விருப்பத்தை ஈடேற்ற ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்! காத்திடுவோம்! காத்திடுவோம்! தீயசக்திகளிடமிருந்து தமிழக மக்களை காத்திடுவோம்! காத்திடுவோம் என உறுதிமொழி ஏற்றார்.

அதிமுகவினர் பல்வேறு அணிகளாக சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியதால், ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள காமராஜர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் அவதிப்பட்டனர். ஜெயலலிதா நினைவுநாள் 5ம் தேதி (இன்று) அனுசரிக்கப்பட்டாலும், ஆறுமுகசாமி கமிஷனில் ஜெயலலிதா மரணம் அடைந்தது 4ம் தேதி என்று கூறப்பட்டிருந்ததால் அதிமுக நிர்வாகிகள் பலர் 4ம் தேதி (நேற்று) அவரது நினைவுதினத்தை அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: