ரஷ்யாவுக்கு எதிரான நோட்டோவின் முயற்சிக்கு பின்னடைவு: கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் நாடுகள் மறுப்பு..!

ரியாத்: கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலராக குறைக்க ஐரோப்பிய கூட்டமைப்பும், ஜி 7 நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த விலை குறைப்பு நடவடிக்கையும், ரஷ்யா கச்சா எண்ணெயை கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கும் அதற்கான காப்பீட்டை மேற்கொள்வதற்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு விதித்திருக்கும் தடையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பின் கூட்டம் ஆன்லைன் மூலமாக வியட்நாமில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ரஷ்யாவும் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பின் கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அதனால் ஏற்படும் தட்டுப்பாட்டால் ரஷ்யாவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என கருதப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த 20 நிமிட ஆலோசனை கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிர்ணயிக்கும் விதமாக வழக்கமான உற்பத்தியை தொடர்வது எனவும் ஒபெக் கூட்டமைப்பின் ஆலோசனையில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைக்கப்பட்டால் உலக நாடுகளில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை மேலும் பாதிக்கும் என்று கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதனால் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க நேட்டோ நாடுகளின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: