மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ல் தொடங்குகிறது: மெட்ரோ நிர்வாகம் தகவல்..

சென்னை : மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்காக பசுமை வழி சாலையில் இருந்து அடையார் சந்திப்பு வரை என அடையார் ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி அடுத்தாண்டு ஜனவரி 15-ம் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதை தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. வரை 3-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5-வது வழிப்பாதை உள்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பசுமைவழிசாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள பகுதியில் சுரங்க ரயில் நிலையத்திற்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் அடையாறு ஆற்றில் 6 மீ அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது.

இதனிடையே, பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைப்பதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 15-ம் தேதி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: