கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு: முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு..!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், இ.சி.ஆர்., மற்றும் சக்தி பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், சின்னஞ்சிறு மழலைகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொது தேர்வை எதிர்நோக்கியுள்ள 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை டிசம்பர் 5ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். பள்ளியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் ஏ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3வது மாடியை பயன்படுத்தக் கூடாது. விடுதி உள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் நேற்று பள்ளியை பார்வையிட்டு, பள்ளிக் கட்டிடத்தின் 3-வது 3 தளங்களில் வகுப்புகள் நடத்த அனுமதியளித்தனர். 3-வது தளத்துக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 145 நாட்களுக்கு பிறகு, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி இன்று திறக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கியது. பள்ளி முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Related Stories: