வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் மெல்லிய காற்று சுழற்சி மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து அந்தமான் கடல் பகுதிக்கு வந்துள்ள காற்றுசுழற்சி, இவை இரண்டையும் ஒன்றிணைத்த இணைப்பு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினம் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழையை கொடுத்தது. மேலும் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கடலூர், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று மதியம் மற்றும் மாலையில் அதிக மழை  பெய்தது. தரைப்பகுதியில் நிலவும் வெப்ப நிலை காரணமாகவும், கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக வட மாவட்டங்களில்  இன்று மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் பெய்து கொண்டு இருக்கின்ற மழை படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து வட கடலோர மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும்.

பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதால் நேற்று மாலையில் இருந்தே மழை பெய்யத் தொடங்கியது. இன்று வடகடலோர மாவட்டங்களில் மழை குறைவாக இருக்கும். டெல்டா மாவட்டங்களிலும் மழை குறையும், கன்னியாகுமரி திருநெல்வேலி, மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மழை குறைந்தாலும், அதற்கு பிறகு தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும். டிச.8ம் தேதி காலையில் வட தமிழ்நாடு - புதுச்சேரி - தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: