செங்கத்தில் கள்ளக்காதலி, மகள் சரமாரி வெட்டி கொலை: தொடர்பை கைவிடச் சொன்னதால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (38). இவரது கணவர் துரை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து பரிமளா 2 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். பரிமளா வீரானந்தல் அருகே அடிவாரம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கும், காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்கும் சென்று வந்தார். அப்போது அடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ்(48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

தற்போது பரிமளா, ‘மகள்கள் வளர்ந்துவிட்டனர். நம்முடைய பழக்கத்தை நிறுத்திக்கொள்ளலாம்’ என்று காமராஜிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பரிமளாவும், அவரது 2வது மகள் ராஜேஷ்வரி(16)யும் அடிவாரம் பகுதியில் உள்ள காட்டிற்கு நேற்று விறகு வெட்ட சென்றனர்.

அப்போது, அங்கிருந்த காமராஜூக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் தொடர்பை கைவிடுவது பற்றி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், கத்தியால், பரிமளாவின் கழுத்து மற்றும் பல இடங்களில் சரமாரி வெட்டி கொலை செய்தார். இதை பார்த்து அலறிய ராஜேஷ்வரியையும் சரமாரி வெட்டினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து காமராஜை கைது செய்தனர்.

Related Stories: