தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டி தேர்வின்றி பணி நியமனம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்யவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியன்று ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக ஒன்றிய அரசு மாற்றி அமைத்துவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே, இதற்கான சட்ட வழிவகைகள் குறித்து ஆராயும் பணி தமிழ்நாடு அரசுக்கு இல்லாமல் போய்விட்டது.

அதே சமயத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள். மறு நியமன போட்டித் தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு, காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும்.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: