2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு பல லட்சம் பேர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் பல லட்சம் ேபர் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர். தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி அரசு வெளியிட்டது. அதாவது அந்தந்த மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை அந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.

இப்பதவிக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு மாநிலம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு நவம்பர் 30ம் தேதிக்கு பதிலாக தேர்வு தேதி 4ம் தேதிக்கு  மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை 12 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு மாதவரம், திருவொற்றியூர், பெரம்பூர், ஆலந்தூர், எழும்பூர் உள்பட 9 வட்டங்களில் நடந்தது. மாநிலம் முழுவதும் நடந்த தேர்வில் பல லட்சம் பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

வாசித்தல் தேர்வில், ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரர் வாசிக்க சொல்லும் வகையில் இருந்தது. இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. எழுத்து தேர்வில் ஏதாவது ஒரு தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுதும் வகையில் இடம் பெற்று இருந்தது. இந்த எழுத்து தேர்வை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு நடந்த மையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து வருகிற 15ம் தேதி மற்றும் 16ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வருகிற 19ம் தேதி வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: