10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சீரழிவு, பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்கிறது திமுக அரசு: க.சுந்தர் எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சீரழிவு, பேரிடரை திமுக அரசு போர்க்கால அடிப்படையில் சீர்செய்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் மகன் வெற்றி செல்வன்-ஜெ.நித்யதி ஆகியோர் திருமணம் மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. திருமணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சுந்தர் திமுகவினுடைய குடும்பம் என்கின்ற அந்த உறவோடு, தன்னை இணைத்து கொண்டவர், அண்ணா காலத்திலேயே மலர்ந்து, தலைவர் கலைஞருடைய காலத்திலே வளர்ந்து, என்னுடன் தொடர்ந்து இன்றைக்கு இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர் சுந்தர். ஒரு சுந்தர் அல்ல. லட்சக்கணக்கான சுந்தர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது என்கின்ற உணர்வோடு கம்பீரமாக இந்த இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

1989ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுந்தர் தற்போது 5வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், அவர் கழகத்தை எந்தளவுக்கு இந்த மாவட்டத்தில் வளர்த்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, கழகத்திற்கு எந்தளவுக்கு மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதுதான் மிகமிக முக்கியம். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், பல்வேறு மாவட்ட செயலாளர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். அந்த மாவட்ட செயலாளர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தீர்களென்றால், அதில் சிறப்பாக  பணியாற்றக்கூடிய மாவட்ட செயலாளர்களில்  10 பேரை தேர்ந்தெடுத்து பட்டியல் போட்டால், அதில் நிச்சயமாக முதலிடத்திற்கு வரக்கூடியவராக சுந்தர் விளங்கி கொண்டிருக்கிறார்.

பதவி வரும், போகும். திமுக தான் நம்முடைய அடையாளம். நம்முடைய இயக்கம். நம்முடைய உயிர் மூச்சு. அப்படிப்பட்ட இயக்கத்தை உயிர் மூச்சாக கருதி நம்முடைய சுந்தர் போன்றவர்கள் காத்து வருவதால் தான், பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 6வது முறையாக அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றைக்கு ஆட்சியை, அதுவும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், சுந்தர் போன்றவர்களுடைய உழைப்பால் தான் இன்றைக்கு இந்தக் கழகம் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அதுவும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாகிப்போன நிதிநிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு, கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழகத்திற்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று தான் நாம் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. அண்ணா தலைமையில், கலைஞர் தலைமையில் திமுக ஆட்சிக்கு வருகிற போதெல்லாம், தமிழ்நாடு புத்துணர்ச்சியும், புத்தெழுச்சியும் பெறக்கூடிய மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல, இப்போதும் மீண்டும் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோடுகிறது.

இன்றைக்கு, சீர்திருத்தத் திருமணம் நடக்கிறதென்றால் யாரும் ஆச்சரியப்படுவதில்லை. 1967ம் ஆண்டு முதன் முதலில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற போது, சட்டமன்றத்திற்குள் நுழைந்து மூன்று தீர்மானங்களைக் கொண்டுவந்து ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார். அந்த மூன்றில் ஒன்று தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்.

சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக மட்டுமல்ல, இது நம்முடைய தாய் தமிழாம் தமிழ்த் திருமணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  அப்படிப்பட்ட தமிழ் மொழிக்கு, செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் கலைஞர். அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் நடைபெறக்கூடிய இந்தத் திருமணத்தில் உங்களோடு சேர்ந்து நானும் கலந்துகொண்டு, மணமக்களை மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருமண விழாவில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பரசன், ஆர்.காந்தி, சி.வெ.கணேசன், ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், ஆவடி சா.மு.நாசர், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், க.செல்வம், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், நிர்வாகிகள் மலர்விழி குமார், ஆறுமுகம், நாகன், நாராயணன், ஆர்.டி.அரசு, எம்.எஸ்.சுகுமார், எஸ்கேபி.சீனிவாசன், சிகாமணி, சசிகுமார், எழிலரசி சுந்தரமூர்த்தி, வெளிக்காடு ஏழுமலை, உசேன், ராஜேந்திரன், பிரேம்சந்த், சிகேவி.தமிழ்செல்வன், கே.குமார், ஞானசேகரன், டி.குமார், பி.சேகர், குமணன், பாபு, கண்ணன், தம்பு, சத்தியசாய், ராமச்சந்திரன், சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், அன்பழகன், சுகுமார், மாஸ்டர் சேகர், அப்துல் மாலிக், செல்வி, கார்த்திகேயன், சோழனூர் ஏழுமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை  வாழ்த்தினர்.

Related Stories: