ராகுல் அரை சதம் வீண் வங்கதேசம் த்ரில் வெற்றி

மிர்பூர்: இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. கேப்டன் ரோகித், தவான் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். தவான் 7 ரன்னில் வெளியேற, ரோகித் 27 ரன், கோஹ்லி 9 ரன் எடுத்து ஷாகிப் ஹசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 49 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஷ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது.

ஷ்ரேயாஸ் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ராகுல் அரை சதம் அடித்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். சுந்தர் 19 ரன்னில் வெளியேற அடுத்து வந்த ஷாபாஸ் (0), ஷர்துல் (2), தீபக் சாஹர் (0) ஏமாற்றமளித்தனர். ராகுல் 73 ரன் (70 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), சிராஜ் 9 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 41.2 ஓவரிலேயே 186 ரன்னுக்கு சுருண்டது. குல்தீப் சென் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் ஹசன் 5, எபாதத் உசேன் 4, மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, தீபக் வீசிய முதல் பந்திலேயே ஷான்டோ டக் அவுட்டாக அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. அனாமுல் 14, கேப்டன் லிட்டன் தாஸ் 41, ஷாகிப் ஹசன் 29 ரன்னில் வெளியேறினர். 34.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்திருந்த வங்கதேசம், மேற்கொண்டு 8 ரன் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டை பறிகொடுக்க, 39.3 ஓவரில் 136 ரன்னுக்கு 9 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

இந்தியா வெற்றி உறுதி என நினைத்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடிய மெகிதி ஹசன் மிராஸ் - முஸ்டாபிசுர் ஜோடி 51 ரன் சேர்த்து த்ரில் வெற்றியை வசப்படுத்தியது (வங்கதேசம் 46 ஓவரில் 187/9). மிராஸ் 38 ரன் (39 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), முஸ்டாபிசுர் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 3, குல்தீப் சென், சுந்தர் தலா 2, தீபக், ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிராஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories: